மதுரை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(55). இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(35). இவர்கள் இருவரும் நேற்று இரவு அக்கனாபுரத்திலுள்ள உறவினர் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை ஹரிகிருஷ்ணன் ஓட்டிவந்தார்.
டி.குன்னத்தூர் அருகே வந்தபோது, மதுரையிலிருந்து பேரையூர் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் மீது இவர்கள் சென்ற இருசக்கரவாகனம் நேருக்குநேர் மோதியதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம், பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த டி.கல்லுப்பட்டி காவல் துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.