மதுரை சந்தைகளில், பொது மக்கள் முகக் கவசங்கள் அணிந்து வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனா தொற்றுப் பரவலின் ஊற்றுப் பகுதிகளாக, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக சந்தைப் பகுதியானது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் முன்பே, தீவிர பரவல் மையமாக மாறும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது.
கோயம்பேடு அனுபவம், தமிழ்நாடு முழுவதற்கும் பெரும் பாடத்தினை கற்றுக் கொடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் பகுதியிலிருந்து வெங்காயம் கொண்டு வந்த வாகனங்களும் அவற்றில் வந்தவர்களுமே கோயம்பேடு கரோனா தொற்றின் ஊற்றுக் கண் என்பது பலரின் கருத்து.
இந்நிலையில், கடந்த வாரம் முதல் சென்னையிலிருந்து மதுரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதால், இவ்வாறு வரும் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என ஜுன் எட்டாம் தேதி ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினேன்.
அப்போதே ”மதுரையில் இயங்கும் சந்தைகளை தீவிரமாக கவனிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் தினசரி எண்ணற்ற வாகனங்களில் சந்தைக்குப் பொருள்களை விற்கவும், வாங்கவும் ஏராளமானோர் வருகிறார்கள். அவர்களில் யாருக்கேனும் தொற்று இருந்தால் அது ஒரே நாளில் பல மடங்காக, பல பகுதிகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் பயன்பாடு, தகுந்த இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்துங்கள்” என்றும் ஆட்சியரிடம் வலியுறுத்தினேன். ஓரிரு நாள்களில் நாங்கள் மதுரையில் இயங்கும் சந்தைகளை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்கிறோம் என்றும் தெரிவித்தேன்.
அதன் அடிப்படையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி, இரவு 11 மணி முதல் 10ஆம் தேதி அதிகாலை நான்கு மணி வரை மதுரையின் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், மீன் மார்க்கெட், நான்குவழிச் சாலையிலுள்ள வண்டியூர் மார்க்கெட், பரவை மார்க்கெட், கீழமாசி வீதியில் இயங்கும் மொத்த வியாபாரப் பகுதி ஆகிய இடங்களில் முகக்கவசம் அணிந்து வருபவர்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டோம்.
அதில், எட்டாயிரத்து 963 பேரை ஆய்வு செய்ததில் இரண்டாயிரத்து 711 பேர் மட்டுமே முறையான முகக்கவசம் அணிந்தவர்களாக உள்ளனர். அதாவது 30 விழுக்காட்டினர் மட்டுமே முறையாக முகக் கவசங்கள் அணிகின்றனர்.
சந்தையைக் காப்பாற்றுவது மொத்த சமூகத்தையும் காப்பாற்றுவதற்கு சமம். மதுரையில் இயங்கும் சந்தைகள் மதுரைக்கானவை மட்டுமல்ல, அருகிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கும் ஆனவை. எனவே பொது மக்கள் சந்தைக்கு வரும்போது முகக் கவசங்கள் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விழிப்புணர்வோடு செயல்படுங்கள். அரசு நிர்வாகம், சந்தைகளைக் கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்