நெல்லையைச் சேர்ந்த மூர்த்தி என்ற மந்திரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளையொட்டி பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலர் பங்கேற்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொள்வர்.
தேவர் ஜெயந்தி விழாவின்போது தவசிக்குறிச்சி கிராமத்தில் உள்ள, எங்களுக்குச் சொந்தமான இடத்தில் முத்துராமலிங்க தேவரை பெருமைப்படுத்தும் விதமாக பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைத்து அன்னதானம் வழங்கி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கடந்த ஆண்டு இதைப்போலவே நிகழ்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் தேவரின் 112ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அன்னதானம், நாட்டுப்புற இசைக்கச்சேரி, கலைநிகழ்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இது தொடர்பாக எங்களுக்குச் சொந்தமான இடத்தில் பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி கோரி அக்டோபர் 9ஆம் தேதி மனு அளித்த நிலையில், நீதிமன்ற உத்தரவைக் காரணம்காட்டி பேனர்களை வைக்க அனுமதி மறுத்துவிட்டனர்.
உயர் நீதிமன்றம் பொது இடங்களில் பேனர் வைக்கவே தடைவிதித்துள்ளது. நாங்கள் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் பேனர் வைக்கவே திட்டமிட்டுள்ளோம். இதனால் பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. அதற்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம். ஆகவே தேவரின் 112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தவசிக்குறிச்சி கிராமத்தில் எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கமுதி காவல் ஆய்வாளர் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:தேவர் ஜெயந்திக்காக 10ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு - ஏடிஜிபி ஜெயந்த் முரளி தகவல்