மதுரை சமயநல்லூரில் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வாகன சோதனைக்கு உட்படாமல் அதிவேகமாக நிற்காமல் சென்றார்.
இதனையடுத்து காவல் துறையினர் சினிமா பாணியில் விரட்டி சென்று அவரை சுற்றி வளைத்து சோதனை செய்தபோது, இரு துப்பாக்கிகள், தோட்டாக்களை அவர் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவரை சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில், மெகா திருடன் என்பது தெரியவந்தது.
அந்த நபர் மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் (30) என்பதும், இவர் சாலையில் தனியாகச் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுவது, வீடுபுகுந்து திருடுவது என பல்வேறு தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.