மதுரை மண்டலத்தைப் பொருத்தவரை மதுரை, தேனி மற்றும் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதேபோல் தேனியில் காங்கிரஸ், அதிமுக, அமமுகவும், விருதுநகரில் காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் முதன்மைக் கட்சிகளாகக் களம் இறங்கியுள்ளன.
இந்நிலையில் தற்போது இறுதிக் கட்ட பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், கடைசி நேர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் கடுமையாக ஈடுபட்டுள்ளன. மதுரையைப் பொறுத்தவரை அதிமுக சார்பாகப் போட்டியிடும் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனின் தீவிரப் பரப்புரை ஒரு புறம் இருந்தாலும், கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மட்டுமன்றி, பகல் நேரத்திலேயே பணப் பட்டுவாடா 'கன ஜோராக' நடைபெற்று வருகிறது.
மதுரை தொகுதிக்கு உட்பட்ட நகர்ப்புறங்களில் ரூ.500-ம், கிராமப்புறங்களில் ரூ.300-ம் என ஆளும் அதிமுக கூட்டணி தரப்பில் பணப் பட்டுவாடா நடைபெற்று வருகிறது. நகர்ப்புறங்களில் நடைபெற்ற பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட நபர்களைக் கூட நேற்று முன்தினம் கம்யூனிஸ்ட் கட்சிக் காரர்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கிடையே மதுரைக்கு அருகேயுள்ள சமயநல்லூர் பகுதி தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பணப்பட்டுவாடாவிற்கான ஆரம்ப கட்ட வேலைகளை மிகத் துரிதாக மேற்கொண்டிருந்தனர்.
ஊருக்கு நூறு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு 27 வாக்காளர்களுக்கும் ஒருவர் ஏஜெண்ட்டாக செயல்படுவார். அந்த ஏஜெண்ட்களின் புகைப்படம், பெயர், தெரு, செல்பேசி எண் ஆகியவை பெறப்பட்டு அட்டவணை தயார் செய்யப்படுகிறது. அதனை வாக்காளர் பெயர் பட்டியலுடன் ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.
27 வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் அனைத்தும் அந்த ஒரு ஏஜெண்ட்டிடம் மொத்தமாக ஒப்படைக்கப்படும்.அவர் தனது பட்டுவாடாவை பிரித்து பிரித்து மேற்கொள்ள வேண்டும். ஒரு வேளை தேர்தல் ஆணையம் பிடித்தால் கூட, கையிருப்பாக வைத்துக்கொள்ள ஆணையம் அனுமதித்துள்ள தொகைக்கு உட்பட்டதாகவே அது இருக்கும்.
வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 என்றும், அந்த வாக்காளர்கள் அனைவரையும் அதிமுகவுக்கு வாக்களிக்க செய்துவிட்டால், போனஸ் ஆக ரூ.5 ஆயிரம் என அந்த ஏஜெண்ட்டுக்கு வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது தேனி தொகுதிக்கு உட்பட்ட மதுரை பகுதிகளில் பட்டுப் பட்டுவாடா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சமயநல்லூர் கிளை செயலாளர் நாகேந்திரன் கூறுகையில், 'கூலிக்கு வேலை செய்ய ஆட்களைத் தேர்வு செய்வது போன்று, வேட்பாளர் பரப்புரைக்கு வரும்போது கூட்டம் கூடுவதற்கும், ஆரத்தி எடுப்பதற்கும் ரூ.500, ரூ.400, ரூ.300 என தரம் பிரித்து வழங்கி வருகின்றனர். மக்களின் ஆதரவு இவர்களுக்கு இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை செயற்கையாக உருவாக்க பாடுபடுகின்றனர்.
அதேபோன்று தொகுதியில் வாக்குக்காக பணம் தரும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல், தங்களின் சொந்த தேவைக்காக பணம் கொண்டு செல்லும் விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் பணத்தை பிடுங்கிக் கொண்டு நாடகமாடுகிறது தேர்தல் ஆணையம்' என்றார்.
அதேபோன்று மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரவை பேரூராட்சியில் 10-ஆவது வார்டில் வசிக்கும் மலர்விழி பேசுகையில், 'அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை வெற்றி பெற வைப்பதற்காக, செல்லூர் ராஜூ பல்வேறு வகைகளிலும் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி வருகிறார். வார்டுக்கு ஒரு அதிமுகவைப் சேர்ந்த பெண் ஒருவரை நியமனம் செய்து அவர்கள் மூலமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது' என்றார்.