மதுரை: கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் அங்கீகாரம் செய்யப்பட்டதை எதிர்த்து, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது காவல் துறையினர் அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவை திண்டுக்கல் ராஜ்மோகன் மற்றும் ராஜன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபையின் கட்சி துணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கீகாரம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதனையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினரின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, திண்டுக்கல் - திருச்சி சாலையில் அமைதியான முறையில் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றோம்.
ஆனால், நாங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கூறி திண்டுக்கல் டவுன் மேற்கு காவல் துறையினர் நாங்கள் உள்பட 18க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த நடவடிக்கை பழி வாங்கும் வகையில் உள்ளது. எனவே, எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று (ஜூன் 7) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மனுதாரர் தரப்பினர் நடக்க முயன்றதால்தான் காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மனுதாரர் உள்ளிட்டோர் மீதான வழக்கில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து விட்டனர்.
எனவே, மனுதாரர்களின் கோரிக்கை ஏற்புடையதல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என வாதாடினார். இதனை பதிவு செய்த நீதிபதி, “மனுதாரர்கள் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் தேவைப்பட்டால் புதிதாக மனு தாக்கல் செய்து உரிய பரிகாரம் தேடிக் கொள்ளலாம்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒடிசா ரயில் விபத்து போன்ற சதிகள் நடைபெற வாய்ப்பு - ஹெச்.ராஜா