தென் மாவட்ட மக்களின் கனவு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூர் பகுதியில் அமையவுள்ளது. இதற்காக. பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டி வைத்தார். மக்களவைத் தேர்தல் நடந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனைகான தொடக்கப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் தொடக்கப் பணியான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2020ஆம் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில், மத்திய சாலை நிதி திட்டத்தின் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து, 6.4 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைப்பதற்காக, 21.20 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்கப்பட்டன. சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மே மாத இறுதியில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் மாதம் முதல், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு 40 நாட்களை கடந்த நிலையில், தமிழ்நாடு அரசு மே 3ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்தது. இதில், அரசு கட்டுமானப் பணிகள் அனைத்தும் குறைந்த ஆட்களைக் கொண்டு செயல்படலாம் என்ற அறிவிப்பு வெளியாகியது.
இதனைத்தொடர்ந்து, எய்ம்ஸ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியானது, இன்று (மே.6) முதல் குறைந்த ஆட்களைக் கொண்டு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, 85 விழுக்காடு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது வேலைகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி முடிவடைந்ததும், குடிநீர், மின்சாரம், கட்டடத்திற்கான அடித்தளங்கள் அமைக்கும் வேலைகள் தொடங்கப்படும். மேலும், சாலைகள் அமைக்கும் பணி, 50 விழுக்காடு நிறைவடைந்த நிலையில் தற்போது சாலைகள் அமைக்கும் பணியும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கில் ஐ.டி நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் - அரசு அறிவுரை !