கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் நேற்று சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதனை கடைபிடித்தனர்.
மதுரையை பொறுத்தவரை நேற்று காலை ஏழு மணி முதல் சுய ஊரடங்கை முழுவதுமாக மக்கள் கடைபிடித்தனர். மதுரை காளவாசல், அரசரடி, பெரியார் நிலையம் சிம்மக்கல் தெற்குவாசல் சுற்றியுள்ள பகுதிகள் கோரிப்பாளையம், தமுக்கம், மாவட்ட நீதிமன்றம், கேகே நகர், மாட்டுத்தாவணி, அண்ணாநகர் தெப்பக்குளம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் 90 விழுக்காடு முடங்கியது.
ஒரு சில இடங்களில் இருசக்கர வாகனங்களை தவிர சுய ஊரடங்கு வேண்டுகோளுக்கு பொது மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அதுமட்டுமன்றி நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் மதுரை மாநகரில் உள்ள அனைத்து தெருக்களும் தற்போது வெறிச்சோடி கிடக்கின்றன.
மதுரை வெறிச்சோடினாலும் அம்மக்களின் செயல் மனதை குளிர்விக்க செய்கிறது. மதுரை மக்கள் கோபக்காரர்கள் மட்டுமல்ல மிகவும் பாசமானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர். இந்த உலகை காப்பது மனிதம்தான் அதற்கிணங்க ஒரு குடும்பம் செய்த சமூகப்பணி எல்லோரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அவசர நிலையில் மருந்துகள் வாங்கக்கூட கடைகள் இல்லாத நிலையில் சமூக பணியாற்றி வரும் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் அனைவருக்கும் மதுரையைச் சேர்ந்த சுதாகரன் என்பவர் தன்னார்வத்தோடு காலை 7 மணி தொடங்கி அனைவருக்கும் ஆப்பிள், பிஸ்கட், தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்.
அவருடன் அவரது மனைவி லட்சுமி மகன் சுதன் ஆகிய மூவரும் உறுதுணையோடு செய்து வருகின்றனர். தன்னலம் பாராமல் உழைக்கும் காவல் துறை, மருத்துவம், ஊடகவியலாளர்களுக்கு இவர்கள் செய்த உதவி பெரும் தொண்டாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, சுதாகரன் கூறுகையில், "சுய ஊரடங்கு நேரத்தில் அவர்களுக்கு எங்கும் இது போன்ற உணவு பொருட்கள் கிடைக்காது. மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சமூக பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வழங்கி ஊக்குவித்து வருகிறோம். இது எங்களால் இயன்ற சிறிய கைமாறு" என்று பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு