மதுரை சதுரகிரி மலையில் அமைந்துள்ளது சுந்திர மாகாலிங்க சுவாமி கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி மற்றும் விழாக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மேலும் பருவகால மழை சரிவர இல்லாததால், சதுரகிரி மலை கடும் வறட்சியாக உள்ளது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழு, போதிய காவல்துறை பாதுகாப்பு, முறையான அவசரகால மருத்துவ வசதி, பாதுகாப்பான தங்கும் வசதி,சாலை பராமரிப்பு, போதிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார். இந்ந மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, இந்து அறநிலையத்துறை அதிகாரி, குடிநீர் கட்டுபாட்டு வாரியம் , வன பாதுகாப்பு துறை அதிகாரி மற்றும் மனுதாரர் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து, சதுரகிரி மலையில் குடிநீர் குழாய் அமைப்பது குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.