மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மாவட்ட அனைத்து தொழில் வர்த்தக சங்க அமைப்புகளைச் சார்ந்த வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, "மதுரையை 2ஆவது தலைநகராக்க இப்பொழுதுதான் ஞானம் பிறந்ததா என மக்கள் கேள்வியெழுப்பலாம். மக்கள் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது அரசின் மரபு. மதுரையை 2ஆவது தலைநகராக்க வேண்டுமென்பது புதிய கோரிக்கை அல்ல, ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கை.
மதுரை 2ஆவது தலைநகராக வேண்டும் என்பது மதுரை மாவட்ட மக்களின் கோரிக்கை மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு போன்றவற்றை முன்வைத்து ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆற்றல் சார்ந்த மனித சக்தி தென் தமிழ்நாட்டு மக்களிடமே உள்ளது. கோரிக்கையை முன்வைக்கும் போது எத்தனை சாயங்கள் பூசப்படும், விமர்சனம் முன்வைக்கப்படும் என்பது தெரிந்துதான் கோரிக்கையை முன் வைத்துள்ளேன்.
இந்தக் கோரிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளேன். திருச்சியை 2ஆவது தலைநகராக்க வேண்டும் என்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோரிக்கை நியாயமானது, அவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அமைச்சர் பதவியா? மதுரை நகரின் வளர்ச்சியா என்று பார்த்தால் எனக்கு மதுரையின் வளர்ச்சியே முக்கியம். திருச்சியா மதுரையா என திசை திருப்பி சிக்கலாக்கி விட வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைப்பதை எதிர்த்து வலுவடையும் போராட்டங்கள்!