ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு 27.10.2022 அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜையை கொண்டாடும் விதமாக ராமேஸ்வரம் பகுதியுள்ள பெண்களின் சார்பாக முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று ராமேஸ்வரம் மேலவாசல் பகுதியிலுள்ள மருதுபாண்டியர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதற்காக 10.10.2022 அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்தும் இதுகுறித்து எவ்வித பதிலும் வழங்கவில்லை. எனவே, முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று ராமேஸ்வரம் மேலவாசல் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கியும் காவல்துறை பாதுகாப்பு வழங்கியும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சக்தி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ராமேஸ்வரம் பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தேஜஸ் வேகத்தில் சென்னையை அடைந்து மீண்டும் சாதனைப் படைத்த வைகை எக்ஸ்பிரஸ்