தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "இந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற 14ஆம் தேதி ( சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் வடக்கு வீதியில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை குடியுரிமை திருத்தட் சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்று பேசுகிறார். இந்த பொதுக் கூட்டத்திற்கு நாச்சியார் கோவில் காவல்துறை ஆய்வாளரிடம், அனுமதி கேட்டும் அனுமதி வழங்கவில்லை. எனவே சட்டத்திற்குட்பட்டு ஜனநாயக ரீதியில் நடைபெறும், இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி பொதுக்கூட்டத்திற்கு உத்தரவிட்டார் . பொதுக்கூட்டம் மாலை 6 மணி வரை 10 மணி வரை நடத்தலாம். அதில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் பேசக்கூடாது. பிற மதத்தினர் மனம் புண்படும் வகையில் பேசக்கூடாது. 500 பேர் பங்கேற்கலாம், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
மேலும், நிபந்தனைகளை மீறி பொதுக்கூட்டத்தில் பேசுவோர், மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி காவல் ஆய்வாளர் வழக்கு தொடரலாம் என்றும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தான்றீஸ்வரம் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டி 27 பேர் காயம்!