மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்து, என்எல்சி நில எடுப்பு விவகாரம் குறித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் அப்பகுதியிலுள்ள ஆறு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.
பரவனாற்று மாற்றுப் பகுதியில் இந்த சுரங்கம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 104 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 275 ஏக்கர் நிலங்கள் என்எல்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 30 ஏக்கர் நிலம் மட்டுமே நில உரிமையாளர்களால் வழங்கப்படாமல் உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் அங்கு சுரங்கத்திற்கான பணிகள் நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெற்றால்தான் மின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கும். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்டுள்ள 104 ஹெக்டேர் பரப்பளவுக்கு உட்பட்ட 382 நில உரிமையாளர்களுக்கு, ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது
அதே காலகட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட 83 ஹெக்டேர் பரப்பளவுக்கு உட்பட்ட 405 நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு 2.6 லட்சம் ரூபாய் என்கிற இழப்பீட்டுத் தொகை நீக்கி, தற்போது 14 லட்சம் ரூபாய் கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது. அதே போன்று கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட 77 ஹெக்டேர் பரப்பளவுக்கு உட்பட்ட 101 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே 2.4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 4 லட்சம் ரூபாய் கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
மொத்தமாக 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கும் மேற்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வருகிற ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 26 வரை பத்து நாட்கள் மேற்குறிப்பிட்ட நில உரிமையாளர்களுக்கு கருணைத்தொகையை வழங்குவதற்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சுரங்கப்பணியில் பாதிக்கப்பட்ட பயிர் செய்யப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்எல்சி நிர்வாகத்திடமிருந்து பெற்றுத் தருவதற்கான உறுதியையும் அளித்துள்ளோம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், நில உரிமையாளர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்ட தொகையை அதிகரித்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும், "இந்நிலையில் சில அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்ட போராட்டம், வன்முறையாக வெடித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. அங்கே உள்ள விவசாயிகள், நில உரிமையாளர்கள் இந்தப் பிரச்னையை அமைதியாக அணுகினாலும், வெளியிலிருந்து வருகின்ற அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களின் தூண்டுதலின் காரணமாக அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது" என கூறினார்.
"இது போன்ற வன்முறை மிக மிக கண்டிக்கத்தக்கது. இதனால் 80க்கும் மேற்பட்டோர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரச்னை என்றால் அதனை பேசித் தீர்க்க முடியும். ஆனால், விவசாயிகளை கேடயமாக்கி அரசியல் செய்வதை ஏற்க முடியாது. வன்முறையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயல்வோர் யாராக இருந்தாலும் அரசு மிக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்" என தெரிவித்தார்.
மேலும், அற வழியில் நடைபெறுகின்ற போராட்டம் என்ற அடிப்படையில்தான் அரசு அனுமதியளித்தது என்றும், ஜனநாயக ரீதியான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு போராட்டம் நடத்தினால் அதில் எந்த வித பிரச்னையும் கிடையாது என்றும் கூறிய அமைச்சர், என்எல்சி நிறுவனத்தின் பணிகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வன்முறை களத்தை உருவாக்குவதை ஏற்க முடியாது என்று கூறினார். சட்டம் ஒழுங்கை காப்பாற்றி அதனை நிலைநாட்டுவது அரசின் கடமையாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்எல்சியை எதிர்த்து போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி - வைகோ கண்டனம்!