மதுரையில் செயல்பட்டுவரும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவும் வகையில் பதினாறு டெலிமெடிசின் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ரோபோக்கள் உதவியுடன் உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்கலாம். மேலும் 24 மணி நேரமும் நோயாளிகளைக் கண்காணிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் எஸ். குருசங்கர் காணொலி காட்சி வாயிலாக விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “மேலை நாடுகளில் கரோனா பெருந்தொற்று காலத்தில் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் இந்த ரோபோக்களே பெரும் பங்கு வகித்துள்ளன.
இந்த ரோபோக்களால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பிற நோயறிதல் சாதனங்களிலிருந்து தரவுகளைச் சேகரிக்கவும், அவற்றை ஆய்வுசெய்து துல்லியமான முடிவுகளை மருத்துவர்களுக்குத் தெரிவிக்கவும் இயலும். கலந்துரையாடலை ஏதுவாக்க டிஸ்பிளே மானிட்டர்கள், கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் மருத்துவர், நோயாளிகள் உறவை மேம்படுத்தலாம்.
இத்தகைய தொலை மருத்துவ ரோபோக்களைச் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதனால், துணை மருத்துவப் பணியாளர்களின் வேலைவாய்ப்புகளை அகற்றவோ அல்லது குறைக்கவோ போவதில்லை. மருத்துவர்கள் துல்லியமாக நோய்களைக் கண்டறிய உதவுவது, அவர்களது திறன்களை மேலும் உயர்த்துவது ஆகியவையே இந்த ரோபோக்களின் பிரதான நோக்கமாகும்” என்றார்.
இதையும் படிங்க: 'உங்களில் ஒருவனாகப் பேசுகிறேன்' - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்