மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குள்பட்ட அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இந்நிலையில், நேற்றிரவு (நவ.19) வழக்கம்போல் டாஸ்மாக் கடை ஊழியர்கள், விற்பனையை முடித்துவிட்டு இரவு 10.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத கும்பல் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த மதுபாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று (நவ.20) காலை கடையை திறக்கவந்த ஊழியர்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, கடைக்குள் சென்று பார்த்தபோது கடையிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 237 மதுபான பாட்டில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அவனியாபுரம் காவல் துறையினர், டாஸ்மாக் கடையில் சோதனை நடத்தினர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி டாஸ்மாக் கடையில் திருட்டு