சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக தற்போது 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.
இதனையடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை 6ஆம் கட்ட அகழாய்விற்கான மத்திய தொல்லியல் துறையின் அனுமதியையும், ஆய்வுப் பணிகளுக்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் இதற்கான ஆய்வுப்பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கவுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குநர் த.உதயச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவ்விழாவில், 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற தலைப்பிலான சிறிய தொகுப்பு நூலினை வெளியிட்டுள்ளனர். இதில், கீழடியின் நாகரீகத்தின் பழமை, கட்டுமான அமைப்புகள், மக்களின் எழுத்தறிவு, கைவினைத் தொழில்கள், பொருளாதாரம், விளையாட்டுகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வணிகர்களுடன் வணிகத் தொடர்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சில பகுப்பாய்வுகள் இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையிலும், எலும்புத் துண்டுகள் குறித்த பகுப்பாய்வு புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனமான டெக்கான் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:கீழடியில் 2,000 ஆண்டுகள் பழமையான பன்றி முத்திரை பவளமணி!