நாட்டுப்புற பாடகியும், திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்த நடிகையுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை மதுரை மாவட்டம் பரவையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
விக்ரம் நடிப்பில் வெளிவந்த ’தூள்’ படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல' பாடல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமடைந்த இவர், காதல் சடுகுடு, தோரணை, வேங்கை, கோவில், தமிழ்ப் படம், மான் கராத்தே எனப் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பரவை முனியம்மாவின் மறைவையொட்டி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. நாட்டுப்புறப் பாடல்களால் தமிழ்நாட்டு மக்களை உற்சாகப்படுத்திய, கிராமப்புற பாடகியின் குரல் ஓய்ந்தது.
அவரது இழப்பு நாட்டுப்புறக் கலைக்குப் பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பரவை முனியம்மா காலமானார்