மதுரை: சென்னை - வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான, ரூபாய் 250 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்டெடுக்கும் பணி நேற்று(ஜுன் 7) சாலிகிராமத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தவறு யார் செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைச் செயல்படுத்துவோம்" எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், '100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைச் செயல்படுத்துவோம் என்கிற அமைச்சரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது' எனத் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பணி என்பது, பிறப்பால் அனைவரும் சமம் என்பதை சட்டப்படி உறுதிசெய்வதாகும். 1971இல் பெரியார் தொடங்கி, கருணாநிதியின் சமூக நீதிக் கோரிக்கை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் 2021இல் முழுமை அடையவேண்டும்.
'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற திட்டத்தில் பயின்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 100 நாட்களில் பணிநியமனம் உறுதி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுக்கால சமூக நீதிப் பயணத்தில், இந்த அறிவிப்பு ஓர் மைல் கல்லாகும்.
![tamil-nadu-priest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-04-archagar-100days-welcome-script-7208110_08062021091834_0806f_1623124114_1078.jpg)
அர்ச்சகர் பணி என்பது அரசுப்பணி
அர்ச்சகர் பணி என்பது அரசுப்பணி ஆகும். அரசுப் பணியில் பொது அறிவிப்பு, தேர்வு, நேர்காணல் என்ற முறையே பின்பற்றப்படுகிறது. பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன பின்பும் இன்று வரை மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவரங்கம் அரங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் பரம்பரை, வாரிசுரிமை அடிப்படையில்தான் நடக்கிறது. இது அரசியல் சட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது.
சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த வழக்கில் மரபு, பழக்கம் என்ற பெயரில் பெண்களைக் கோயிலுக்குள் வரவிடாமல் தடுப்பது தீண்டாமை என்று கண்டித்தது உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டில் அரசுப் பயிற்சிப் பள்ளியில் ஆகமம் கற்று,தீட்சை பெற்ற இந்து மதத்தின் கவுண்டர், தேவர், வன்னியர், முதலியார், யாதவர், தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பிராமணர் உள்ளிட்ட அனைத்து சாதி மாணவர்களைக் கடந்த அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை.
மாணவர்களாகிய நாங்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் இராஜீ, வாஞ்சி நாதன் ஆகியோர் உதவியுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீதிகளிலும், நீதிமன்றத்திலும் போராடி வந்தோம். எதுவும் நடக்கவில்லை. ஆனால், தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு, கரோனா பேரிடர் காலத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் நியமன அறிவிப்பு வெளியிட்டிருப்பது சமத்துவத்தின்பால் மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
மு.க ஸ்டாலினுடன் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பார்
தமிழ்நாடு முதலமைச்சரும் , திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடன் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பார் என்று, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் நம்புகிறது. மிகுந்த நன்றியைத் தெரிவிக்கிறது. சமத்துவக் கொடியை உயர்த்திப் பிடித்து கருவறைத் தீண்டாமை ஒழியட்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.