கொச்சி: கேரள மாநிலம் போர்ட் கொச்சி, மட்டஞ்சேரி ஆகிய பகுதி ஓவியக் கலைஞர்களின் புகலிடமாக இன்றளவும் திகழ்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வெனிஸ் நகரத்தில் நடைபெற்று வரும் ஓவியக் கண்காட்சி போன்று, அதற்கு அடுத்தபடியாக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் கேரள மாநிலம் கொச்சி மட்டஞ்சேரியில் சுமார் 3 கி.மீ. நீளத்திற்கு டவுன் வீதியில் இந்த ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சுமார் 12 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு அரங்கிலும் 20 முதல் 30 ஓவியக் கலைஞர்களின் படைப்புகள் இங்கே காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மியான்மர், இலங்கை, வியட்நாம், ஜப்பான், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஓவியக் கலைஞர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.
சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் வெவ்வேறு காலகட்டத்தில் படித்து முடித்த கலைஞர்கள் 25 பேர் ஒன்றிணைந்து 'திணைவாசிகள்' என்ற அமைப்பை உருவாக்கி ஜூடவுன் பகுதியில் எஸ்விஆர் கேட் எனும் பெயரில் ஓவிய அரங்கை அமைத்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திணைவாசிகள் அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சி அரங்கு கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த அரங்கினை தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஓவியரும் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி முன்னாள் முதலமைச்சருமான சந்ரு, கேரளாவைச் சேர்ந்த மூத்த ஓவியரும் சிற்பியுமான ரகுநாதன் ஆகியோர் கடந்த மார்ச் 7 ஆம் தேதி திறந்து வைத்தனர்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த, தமிழர்களின் தொன்மை நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய கீழடி அகழாய்வு உட்பட மதுரையின் அடையாளங்கள், கிராம சூழல், சமூக கட்டமைப்பு, பெண்களின் நிலை குறித்த ஓவியங்கள் புகைப்படங்கள் குகை ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டதோடு, கீழடி அகழாய்வு குறித்த படங்கள் மற்றும் 22 நிமிடம் ஓடக்கூடிய கீழடி குறித்தான ஆவணப்படமும் இங்கே ஒளிபரப்பப்பட்டது.
மதுரை மாவட்டம் கரடிப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் சரண்ராஜ், கீழடி அகழாய்வு குறித்து முழுமையான ஒரு தேடுதலோடு குறும்படத்தையும் தயாரித்து கீழடி அகழாய்வின்போது இருந்த கள நிலவரங்களையும் புகைப்பட கண்காட்சியாக இங்கு வைத்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் நேரில் சென்று கொச்சியில் இந்த புகைப்பட கண்காட்சியைக் கண்டுகளித்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் பல ஆயிரக்கணக்கானோர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கீழடியின் பெருமையை உலகளாவிய அளவில் கேரளத்தின் வழியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.
இதையும் படிங்க: குமரியில் சத்ரபதி சிவாஜி சிலை உடைப்பு: பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிப்பு!