அலங்காநல்லூர்(மதுரை): தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.டி.ஆர். பனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அலங்காநல்லூர் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகர் சூரி உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
உடல் தேர்வு மூலம் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் காண தகுதி பெற்றனர். 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள வராத நிலையில் மற்ற வீரர்களை மருத்துவக் குழு தகுதி நீக்கம் செய்தது. மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியைத் துவக்கி வைத்தார். சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கிய நிலையில், சீறிப் பாயந்த காளைகளை அடக்க காளையர்கள் முனைப்புக் காட்டினர். மாடுபிடி வீரர்களின் கிடுக்குப்பிடியில் இருந்து தப்பியும், வீரர்களுக்கே சவால் விடும் வகையில் களமாடியும் சில காளைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட காளைகள் களமாடிய நிலையில், 10 சுற்றுகளாக போட்டி நீடித்தது. இதில் 303 மாடுபிடி வீரர்களும் 825 காளைகளும் களத்தில் இறங்கி விளையாடினர். மொத்தம் 53 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளை கட்டித் தழுவி அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், சைக்கிள், சலவை இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், கட்டில், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் அள்ளி வழங்கப்பட்டன.
அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டி தப்பிய காளைகளுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட சிறப்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் பலர் காயம் அடைந்தனர். இறுதியில் 26 காளைகளைப் பிடித்து சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அபி சித்தர் முதலிடம் பிடித்தார்.
அதிக காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த அபி சித்தருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், 7 லட்ச ரூபாய் மதிப்பிலான நிசான் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அபி சித்தருக்கு பல்வேறு அயலக தமிழ்ச் சங்கங்கள் இணைந்து நாட்டு மாடு மற்றும் கன்று பரிசாக வழங்கின.
அதேபோல் 20 காளைகளை பிடித்து 2ஆம் இடம் வந்த மதுரை மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த அஜய் குமார் என்பவருக்கு இரு சக்கர வாகனமும், 12 காளைகளை அடக்கி 3ஆம் இடம் வென்ற அலங்காநல்லூர் மண்ணின் மைந்தன் ரஞ்சித் என்பவருக்கு டூவீலரும் பரிசாக வழங்கப்பட்டன. சிறப்பாக களமாடிய புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் நிஸான் சொகுசு கார் மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டன.
2ஆம் இடம் பிடித்த புதுக்கோட்டையை சேர்ந்த எம்.ஆர்.சுரேஷ் என்பவரின் காளைக்கு இரு சக்கர வாகனமும், 3வது இடம் பிடித்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த வெள்ளம் பழம்பட்டியை சேர்ந்த பட்டாணி ராஜா என்பவரின் காளைக்கு ஸ்கூட்டர் பரிசும்(டிவிஎஸ் எக்ஸெல்) வழங்கப்பட்டன. மேற்கண்ட பரிசுகளை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: Emergency Exit: இண்டிகோ அறிக்கை அளிக்க டிஜிசிஏ உத்தரவு.. பொய்யர் என செந்தில் பாலாஜி ட்வீட்டியது யாரை?