தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு முல்லைப் பெரியாறு குடிநீரைக் கொண்டுவரும் ரூ.1,295 கோடி மதிப்புள்ள திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், "மதுரை மக்களின் நீண்ட நாள் கனவுத்திட்டமான, முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப்பில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டம் 2023ஆம் ஆண்டு நிறைவடையும். இதன்காரணமாக மதுரையில் கூடுதலாக 1.10 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். மதுரையில் அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்னை தலை எடுக்காது. மதுரை மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 500 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவதில் நாட்டிற்கே எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நகர்ப்புறங்கள் மட்டுமன்றி, கிராமப் பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களும் தங்குதடையற்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறுவதற்கு மாநில அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுகிறது. இதன் காரணமாக, தேசிய அளவில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பல்வேறு விருதுகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசை குறை கூறுவதையே, தனது நேரத்தை செலவிடுகிறார். அண்மையில் மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளோம். கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் இருந்து வெறும் ஆறு பேர்தான் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி இருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு 313 அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு சட்டப்போராட்டம் நடத்தி, அந்த உரிமையைப் பெற்றுத்தந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதேபோன்று காவிரி உரிமையை மீட்பதற்கு உரிய சட்டப் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு வடிவமைத்துக் கொடுத்தவரும் ஜெயலலிதா தான்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மதுரையின் தாகம் தீர்க்கும் நீண்டநாள் கனவுத் திட்டம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!