மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா வைரஸ் தொற்று குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (மே 29) காணொலி காட்சி மூலம் போதுமான அறிவுரைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியிருக்கிறார்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை காலத்தில் போதுமான அளவு மழை இருக்கும். அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு நீர்நிலைகள் தூர்வாரும் பணியையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றுகளுக்கும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நான்காவது முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாளைய தினம் நிறைவடைகிறது. ஒவ்வொரு முறையும் தேவையான அறிவுரைகள் பெறப்பட்ட பிறகே, தளர்வுகள் செய்யப்பட்டன. பொதுமக்களின் முழு வாழ்வாதாரத்தை மீட்கின்ற வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு குறித்து தேவையான அறிவுப்புகள் முன்னரே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குள் அவை படையெடுக்குமானால் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேளாண்மைத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் இதற்காக விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியீடு: செங்கோட்டையன்