மதுரை: நீர்நிலை மற்றும் நத்தம் புறம்போக்கு நீர்வழி கரையோரம் நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களை வெளியேற்றக்கூடாது எனவும், அம்மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும், மேலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள மக்களுக்கு பத்திரம் மற்றும் பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டா கேட்டு தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், அக்கோரிக்கை தொடர்பாக மதுரை ஆட்சியரிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து சு. வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல்வேறு வகைமை நிலங்களில் குடியிருப்போருக்கு குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என 5 ஆயிரம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்க வேண்டிய நில வகைகளில் விரைந்து முடிவெடுக்க கோரிக்கை விடுத்துள்ளேன்’’ என்றார்.
மதுரை ஆதீனம் தனது உயிருக்கு ஆபத்து எனவும் பிரதமரையும், அமித்ஷாவையும் சந்திக்கவிருப்பதாக பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆன்மிகத் தலைவர்கள் அரசியல் பேச களத்திற்கு வந்துவிட்டால் அரசியல் எதிர்வினை என்ற அடிப்படையில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்படும். மடாதிபதிகள் மற்றும் ஆதீனங்களுக்கு பல்வேறு பழக்க வழக்கங்கள், சம்பிராதயங்கள், சடங்குகள் உள்ளன. ஆனால், இதையெல்லாம் விட நாட்டின் அரசியல் சாசன சட்டம் மேலானது.
அதற்கு மடாதிபதிகளும், ஆதீனங்களும் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தங்களை உட்படுத்திக்கொண்டு தான் எல்லா மடாதிபதிகளும் வந்துள்ளனர். சன்னியாசி தர்மப்படி சாதுக்கள் ஆதீனங்கள் எங்கே போனாலும் நடந்து தான் போக வேண்டும். ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட வேண்டும். அதையும் பிச்சையெடுத்து தான் சாப்பிட வேண்டும். அதனை ஓடும் நீரில் கழுவி சுவையில்லாமல் சாப்பிட வேண்டும் என உள்ளது.
இதையெல்லாம் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை. அதைப் பின்பற்ற வேண்டும் எனவும் நாங்கள் கூறவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி விட்டார்கள். எல்லோரும் மாறி கொண்டுள்ளனர். அதைத்தான் அரசும் சொல்கிறது. காலத்திற்கேற்ப மனிதனை மனிதன் தூக்கும் அடிமைத்தனம் மாற வேண்டும். பழமை வாதம் உதிரும் போது இந்தச்சத்தம் ஏற்படுகிறது. ஜனநாயகம் இந்த சத்தத்தை மீறி வெற்றி பெறும்” என்றார்.
இதையும் படிங்க: ஆதீனம் விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் அரசியல் செய்யட்டும் - வைகோ