தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்துக் கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இடம் ஓர் அவசரக் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். ஒரு நோயாளிக்கு 6 குப்பிகள் வீதம் 1166 நோயாளிகளுக்கு மட்டுமே கொடுக்கக்கூடிய ரெம்டெசிவிர் மருந்தை மத்திய அரசு அளிக்கிறது. இந்த தினசரி அளவை 3 மடங்காக உயர்த்த அவர் கோரியுள்ளார். தினசரி வழங்கப்படும் மருந்தின் அளவை 7,000லிருந்து 20,000 ஆக உயர்த்துமாறு அவர் கோரியுள்ளார்.
ரெம்டிசிவிர் மருந்தானது நெஞ்சகப் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு அவசரமாய்த் தேவைப்படுகிறது. ஆனால், தேவைக்கும், வழங்கப்படுவதற்குமான இடைவெளி மிகப் பெரிதாக உள்ளது.
தமிழ்நாட்டின் தேவை பற்றி முதலமைச்சர் கூறுவதற்கான கள சாட்சியத்தை நான் மதுரையில் காண்கிறேன். மதுரைக்குத் 500 குப்பிகள் மட்டுமே தினமும் வழங்கப்படுகிறது. ஒரு நோயாளிக்கு ஆறு குப்பிகள் வீதம் தினமும் 80 நோயாளிகளுக்கு மட்டுமே இது போதுமானது. ஆனால் மருந்து வாங்குகிற வரிசை மிக நீண்டதாகவும், எண்ணிக்கை 250 பேரைக் கடக்கிறது.
இந்த இடைவெளி இன்னும் விரிவடைந்ததால் என்ன ஆகும் என்ற கவலை மனதைக் கவ்வுகிறது. விளைவுகள் மிக மோசமானதாக அமையும். அதனால் முடிவுகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும். முதலமைச்சரின் கோரிக்கையை ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன் ஆகியோர் உடன் நிறைவேற்ற வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருப்பதியில் ஆக்ஸிஜன் சிலிண்டரில் பழுது: 11 பேர் உயிரிழப்பு!