மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பொட்டுலுப்பட்டியில் காந்திஜி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னார்வ ஆசிரியர் செல்வம், மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வியைத் தாண்டி அறம் சார்ந்த வகுப்புகளை நாடகக்கலையின் வழியாக வழங்கி வருகிறார்.
அவர் மாணவர்களை நடிக்கவைத்து, அதன்மூலம் அவர்களை உணர வைக்கின்ற உத்தியைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தைக் கற்பிக்கிறார். அவர் இலவசமாகவே மாணவர்களுக்கு 'நாடகக்கலை வழியாக அறம்' என்ற சேவையை மனமுவந்து செய்து வருகிறார்.
இதனிடையே கரோனா பரவலைக் கட்டுபடுத்த கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஆசிரியர் செல்வத்தின் குடும்பத்திலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதனையறிந்த காந்திஜி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் தங்களது சேமிப்பிலிருந்து திரட்டிய தொகை 565 ரூபாயை தங்களை வழிநடத்திய ஆசிரியர் செல்வத்திற்கு இன்று வழங்கினர். இதுமட்டுமில்லாமல் மாணவர்களின் பெற்றோர் அனைவரும் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள், பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருள்களை நிவாரணமாக வழங்கினர்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு ஆசிரியர் செல்வம் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், "இந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்க வேண்டும், என நான் தீர்மானித்து நாடகக் கலை வழியாக அறத்தைப் போதித்தேனோ, அந்த வெற்றியை நான் கண்கூட பார்த்துவிட்டேன். அவர்கள் வழங்கிய தொகையைக் காட்டிலும் பலகோடி மடங்கு பெரியது அவர்களின் மனது.
எதிர்கால தலைமுறை எப்படி ஒரு சமூகப் புரிதலோடு செதுக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வையே ஒரு சாட்சியாக நான் எடுத்துக் கொள்கிறேன். இது என் பயணத்தில் கிடைத்த மற்றொரு வெற்றி. இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை நான் சந்தித்துள்ளேன்.
தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளை நோக்கி நான் செல்வதற்கு மற்றொரு உந்துசக்தியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. நான் ஒரு ஆசிரியனாக இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.
இதையும் படிங்க:கேரள எல்லையில் தமிழ் மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சிக்கல்!