முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது பேசிய அவர், "கலைஞருக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமலயே என்னை திமுகவில் இருந்து சில துரோக சக்திகள் விலக்கிவிட்டார்கள். எனக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி கிடைத்ததால், பொறாமையில் ஸ்டாலின் பொருளாளர் பதவி கேட்டார். கருணாநிதிக்கு பின் நீதான் எல்லாம் என ஸ்டாலினிடம் நான் கூறினேன். ஆனால் ஸ்டாலின் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.
நான் மத்திய அமைச்சர் ஆனபோது ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டும் என கேட்டதாக கருணாநிதி கூறினார், அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டேன், கழகத்திற்காக மட்டுமே நான் பணிபுரிந்தேன். திமுக உறுப்பினர்கள் பட்டியல் என்ற பெயரில் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பெயரை காட்டி கருணாநிதியை ஏமாற்றியதை சுட்டிக்காட்டினேன். எனது பிறந்தநாளிற்காக எனது ஆதரவாளர்கள் அடித்த நோட்டிசை காரணம் காட்டி என் மீது நடவடிக்கை எடுக்கவைத்தார்கள்.
ஸ்டாலினுக்கு திமுகவினர் வருங்கால முதல்வரே என நிரந்தரமாக போஸ்டர் அடித்துவைத்துள்ளார்கள். ஆனால் அது உண்மைதான், ஸ்டாலின் கடைசிவரை வருங்கால முதலமைச்சர்தான் அவரால் முதலமைச்சர் ஆகவே முடியாது.
கலைஞரையே மறந்து திமுக தற்போது செயல்படுகிறது. கருணாநிதியின் பெயரை நினைவுகூறும் வகையில் உச்சரிக்கும் வகையில் எனது முடிவு அமையும்.
விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன், எதையும் சந்திக்க தயாராக இருங்கள். எனது முடிவு அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம், எப்படியும் இருக்கலாம், எனது ஆதரவாளர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சியினரின் சுயநல வேட்டைக்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது - கமல் ஹாசன்