ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படும். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல பழைய விமான நிலையம் வந்தார்.
அப்போது, அதிமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அதே விமானத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினும் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் கலந்துகொள்வதற்காக உள்நாட்டு முனையத்திற்கு வந்தார். அவரை திமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
ஒரே விமானத்தில் முதல் வரிசையில் இடதுபுறம் ஜன்னல் பக்க இருக்கையில் முதலமைச்சரும் வலது புறம் ஜன்னல் பக்க இருக்கையில் எதிர்க்கட்சி தலைவரும் அமர்ந்தனர். விமானத்தில் மு.க.ஸ்டாலின் முதலில் சென்று அமர்ந்தார். இறுதியாக விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏறி இருக்கையில் அமர செல்லும் முன் மு.க.ஸ்டாலினை பார்த்தது வணக்கம் செய்தார். மு.க.ஸ்டாலினும் பதில் வணக்கம் வைத்தார்.
இந்த விமானத்தில் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் சென்றனர். முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.