மதுரை: பயணிகளுக்கு ரயில் பயணச் சீட்டு வழங்க கணினி, பிரிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கணினிக்கு போதிய விவரங்கள் வழங்க தின் கிளையண்ட்ஸ், மல்டிப்ளெக்சர், லிங்கர், லேன் எக்ஸ்டென்டர் போன்ற பல்வேறு உப கருவிகள் உள்ளன. இந்த உபக் கருவிகள் பழுதாகும் போது பயணச்சீட்டு வழங்குவது தடைபடும். பழுதுகள் ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு, பழுது நீக்கும் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பிய பின்னரே பழுதுகள் நீக்கப்படும். இந்த முறையில் காலதாமதம் ஏற்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், பழுதுகளை உடனடியாக சரி செய்ய உப கருவிகள் மேலாண்மைத் திட்டம் தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், உப கருவிகளின் செயல் திறனை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க இணையதள வாயிலான கண்காணிப்பு முறை பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியானது தெற்கு ரயில்வே வர்த்தகப் பிரிவு தொழில் நுட்ப அணி அலுவலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, தடையற்ற பயணச் சீட்டு வழங்க ஏதுவாக இருக்கும். கண்காணிப்பு முறையை கணினி மட்டுமல்லாது அலைபேசி வாயிலாகவும் செயல்படுத்த முடியும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய காகிதமில்லா பசுமை வழி திட்டமாகும். புதிய கருவிகள் வாங்க, வாங்கிய கருவிகளை பராமரிப்பது போன்ற செயல்களுக்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!