மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அணைப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றின் அருகே புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வழிபட வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், வைகை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் காணப்பட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாரியப்பன் என்பரின் மகன்கள் ஜெகன் (எ) சதீஷ் குமார் (34), அவரது சகோதரர் குமரேசன் (32) ஆகியோர் அணைப்பட்டி ஆஞ்சிநேயர் கோயிலுக்கு வந்துள்ளனர். அதனையடுத்து கோயிலுக்கு அருகிலுள்ள வைகை ஆற்றில் குளித்துள்ளனர். அவர்களுக்கு அருகில் அணைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் வைகை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரத்தொடங்கியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனை சற்றும் எதிர்பாராத மூன்று பெண்களும் கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் பயத்தில் கூச்சலிட அருகில் குளித்துக்கொண்டிருந்த சதீஷ்குமார் ஆற்றில் இறங்கி, மூன்று பெண்களையும் காப்பாற்ற முயன்றார். அவரைத் தொடர்ந்து குமரேசனும் ஆற்றில் இறங்கினார்.
அப்போது வெள்ளத்தில் சிக்கிக்தவித்த மூன்று பெண்களையம் காப்பாற்றி சகோதரர்கள் இருவரும் மீட்டு கரையில் சேர்த்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சகோதரர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் ஆற்றில் இறங்கிய சகோதரர்கள் இருவரையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பெண்களின் உயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில், சகோதரர்கள் இருவரும் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லாரி மோதிய விபத்தில் கண்முன்னே மகள்கள் மரணம்: தந்தைக்கு தீவிர சிகிச்சை