மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள லெட்சுமி சுந்தரம் ஹாலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின் கட்டண உயர்வு குறித்த கருத்துகேட்பு கூட்டத்தில் மதுரை மாவட்ட குறு மற்றும் சிறுதொழில்கள் சங்கமான மடீட்சியா அமைப்பினர் மின் கட்டண உயர்வுக்கு எதிரான தங்களது கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்து அதனை மனுவாக வழங்கினா்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மடீட்சியா அமைப்பின் தலைவர் சம்பத் பேசியபோது, தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு அறிவிப்பால் குறு சிறு தொழில் நிறுவனத்தினர் கடும் பாதிப்புக்குள்ளாவர். குறு சிறு தொழில் நிறுவனத்திற்கான நிரந்தர கட்டணம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாயை தாண்டி அதிகரித்துள்ளது. இதேபோன்று மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு முடங்கும் நிலை உள்ளது.
புதிதாக சிறு குறு தொழில் தொடங்க முடியாத நிலையை உருவாக்கும். மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு உரிய முடிவு எடுக்காத நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள குறு சிறு தொழில் முனைவோர் ஒன்றுகூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கவுள்ளோம். தமிழ்நாடு அரசு மின்சாரத்தை வாங்குவதற்கும் விற்பதற்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது.
மின் வழித்தடங்களில் உள்ள மின்கசிவு போன்றவற்றை சரி செய்ய வேண்டும். மின்வாரியம் தனது துறை ரீதியான நஷ்டத்தை குறு சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது திணிக்க முயலும் கட்டண உயர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம்.. ஆசிரியர்கள் 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி