மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித். இவர் காரைக்குடி போலீஸ் நிலையத்திற்கு ஜாமீன் கையெழுத்திடச் சென்றபோது, ஒரு கும்பல் அறிவழகனைப் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில் மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி அவர் ஜாமீனில் தற்போது வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆதிநாராயணன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் மீது எத்தனை கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, 3 கொலை வழக்குகள் உட்பட 12க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, கொலை, கொள்ளை வழக்கு உள்ளவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார். கொலையும் செய்வார்கள் தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்பார்கள், இதை நீதிமன்றம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கையை ஏற்புடையதல்ல. இதில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து ஆதிநாராயணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். எந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து இந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஆட்டோ ஓட்டுநர்.. ஐஐடி, ஐஐஎம் மாணவர்களுக்கு பாடம் எடுக்க அழைப்பு.. யார் இந்த அண்ணாதுரை!