மதுரை: வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருவாரூர் கமலாலயக் குளத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் 2-ஆவது மிகப்பெரிய தெப்பக்குளமாகும். இது கடந்த 1645 -ஆம் ஆண்டு திருமலை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உருவாக்கியது தான் இந்த தெப்பக்குளம்.
மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். தைப்பூசத்தில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள, தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கமாகும். இந்த திருவிழாவில் மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 5 -ஆம் நாள் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தெப்ப உற்சவம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெறவுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காக இக்குளத்தைச் சுற்றிலும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு படித்துறையிலும் இரும்பாலான கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திருவிழா அன்று குளத்திற்குள் சுற்றி வரும் தெப்பத்தை பக்தர்கள் வடம் பிடித்து கரைப்பகுதிகளில் இழுத்துச் செல்வதற்கு வசதியாக இந்த இரும்பு வேலிகளும், கதவுகளும் தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் பொருத்தப்படும். அதற்காக மீனாட்சி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரும்பு வேலி மற்றும் கதவுகளை அகற்றி மீண்டும் பொருத்துவதற்காக ரூ.70 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மரத்தாலான தெப்பம் அமைப்பதற்கு ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்திற்கும், கரையில் உள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் தகர கொட்டகை அமைக்க ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்திற்கும், குளத்தின் கரைகளில் உள்ள கைப்பிடிச்சுவர்களில் வர்ணம் பூசுவதற்க ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்திற்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கான ஒப்பந்தக் கோரிக்கைகள் ஜனவரி 21 -ஆம் தேதி (இன்று) மாலை 4 மணியளவில் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: Breaking News:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி