மதுரை: சிறுமிகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும் அவரவர் பகுதிகளுக்கே சென்று சிலம்பாட்டம் கற்றுத் தருவதுடன், அவர்கள் ஒவ்வொருவரையும் தன்னம்பிக்கையுள்ள மனிதர்களாக்குகிறார் சிலம்புக்கலை ஆசிரியை சேதுலட்சுமி. அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.
உடல் மற்றும் மனநலம் காக்கும் சிலம்பம்
தமிழர்களின் மரபுக் கலைகளில் ஒன்றாகப் போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் சிலம்பாட்டம், தற்காப்பு கலையாக இருப்பதுடன் உடல் மற்றும் மன நலனுக்கும் உகந்த சிறப்பான கலையாகவே திகழ்கிறது. இந்தக் கலையை சிறியவர் முதல் பெரியவர் வரை வயது பேதமின்றி அனைவரும் கற்றுக்கொண்டு, உடல் மற்றும் மன நலனை பேணி காப்பது இன்றைய வாழ்வியலுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.
இத்தகைய தனித்துவம் பெற்ற இந்தக் கலை அழிவை நோக்கி செல்வதாக பேச்சுகள் ஒரு புறம் இருந்தாலும், சிறப்புமிக்க சிலம்பம் பயிற்சியை ஆர்வத்துடன் கற்றுக்கொள்பவர்களும், கற்றுக்கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெண்களுக்கு அவசியமாகும் சிலம்பம் பயிற்சி
சிலம்பம் கற்றுக்கொடுப்பதற்கு என தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் தனித்துவமான பயிற்சி மையமும், இக்கலையில் வல்லமை மிக்க ஆசானும் இருப்பதை பலர் கூறி கேள்விப்பட்டிருக்கலாம். அந்த வரிசையில், மதுரை விராட்டிபத்திலுள்ள ஸ்ரீமாருதி சிலம்பப் பயிற்சிப் பள்ளியின் ஆசான் ராமகிருஷ்ணன், சிலம்ப பயிற்சி மூலம் பல ஆசான்களை உருவாக்கியதில் பெரும் பங்கு வகிக்கிறார். நான்கு தலைமுறைகளாக சிலம்ப பயிற்சியின் மூலம் தகுதி மிக்க ஆசான்களையும், மாணவர்களையும் உருவாக்கியுள்ளனர்.
சிலம்பம் கலை எதிகாலத்திலும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இக்கலையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களை தேடிப்பிடித்து பயிற்சி அளித்து வருவதுடன், பெண் குழந்தைகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும் சிலம்பக்கலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தன்னுடைய மனைவி சேதுலட்சுமிக்கு உரிய பயிற்சியளித்து தயார்ப்படுத்தியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சாதாரணமாக நிகழும் இந்தச் சூழ்நிலையில், அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்வது அவசியமாக உள்ளது.
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் சிலம்பம் பயிற்றுவிக்கும் சேதுலட்சுமி
மதுரை புறநகரிலுள்ள அச்சம்பத்து, நாகமலை, விராட்டிபத்து, செக்காணூரணி, கோச்சடை ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள சிறுமியர், பெண்களை ஒருங்கிணைத்து மிகக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்து வருகிறார் சேதுலட்சுமி.
பள்ளிகளுக்கு நேரடியாக சென்றும், ஆர்வம் மிக்கவர்களை கண்டறிந்தும் பயிற்சி அளித்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்று அவர்களின் திறமையையும் உலகறிய செய்கிறார்.
கோயமுத்தூரிலுள்ள மென்பொருள் நிறுவனத்துக்காக வீட்டிலிருந்து பணி செய்யும் யாழினி கூறும்போது, 'சிறுவயதிலிருந்தே சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது என்னுடைய வீட்டிற்கு அருகிலேயே வந்து சொல்லிக் கொடுப்பதால் கடந்த மூன்று மாதங்களாக சிலம்பப்பயிற்சி எடுத்து வருகிறேன்.
பொது இடங்களில் சிலம்பம் பற்றி பாடம்
தற்காப்புக்காக மட்டுமன்றி, எனக்கு அடுத்து வருகின்ற தலைமுறைக்கும் இந்தக் கலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் கற்றுக் கொள்கிறேன்' என்கிறார். ஒருநாள் விட்டு ஒருநாள் என முறை வைத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, அந்தப் பகுதிகளிலுள்ள பொது இடங்களில் அனைவரையும் வரவழைத்து, சிலம்பத்தின் அவசியம் குறித்து பாடம் எடுக்கிறார் சேதுலட்சுமி. விருப்பமுள்ளவர்கள் இணைந்து வரும்போது, அவர்களுக்கு நாள் தவறாமல் வந்து பயிற்சி அளிக்கிறார் .
சீதாலட்சுமி என்ற பெண் கூறும்போது, 'என்னுடைய குழந்தையைச் சேர்ப்பதற்காக மட்டுமே இங்கு வந்தேன். பிறகு எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு மட்டுமன்றி பெண்களின் உடல்நலனுக்கும் ஏற்ற கலையாகவே இதனைக் கருதுகிறேன். என்னுடைய குழந்தை எதிர்காலத்தில் சிலம்பப் பயிற்சியாளராக வர வேண்டும் என்பதும் எனது குறிக்கோள்' என்கிறார்.
இலக்கியா என்ற பெண் கூறுகையில், 'நான் இக்கலையைக் கற்றுக் கொள்ள முழுக் காரணம் என்னுடைய கணவர்தான். அவருடைய ஊக்கம் காரணமாகவே நானும் எனது குழந்தையும் இங்கே பயிற்சி எடுத்துக் கொள்கிறோம்' என்கிறார்.
தற்காப்பு, உடல் நலம், மன நலம் என பல நன்மைகள் ஒரு சேர பின்னிப்பிணைந்து இருக்கும் இந்தச் சிலம்ப கலையானது அழியாமல் இருந்திட வேண்டும், பெண்களும் இதன் பயனை முழுமையாக அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இதனை செயல்படுத்தி வரும் சேதுலட்சுமிக்கு பாராட்டுகள்.
இதையும் படிங்க: மாமியார்- மருமகள்களுக்கு பிரத்யேக அழைப்பு விடுக்கும் காரைக்கால் உணவகம்