மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருணாச்சலா பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள்.
மதுரையில் கரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களிலிருந்து மதுரைக்கு மக்கள் அதிகமாக வருவதால் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு வரவேண்டும். முதலமைச்சர் பிரதமரிடம் கரோனா நிவாரண நிதியாக மூன்றாயிரம் கோடி ரூபாய் கேட்டுள்ளார். மத்திய அரசிடமிருந்து கரோனா நிவாரணம் பெற தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" என்றார்.
’முதலமைச்சருக்கு கரோனா வராது’
முதலமைச்சர் சில நாள்களாக வெளியே வராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஜெயலலிதா எப்படி கருணையும், பாசத்தோடும் இருப்பாரோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி உள்ளார். முதலமைச்சர் எங்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் உள்ளார். எங்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என அறிவுரை வழங்கியவர். சக அமைச்சர்கள் மீது பாசமும் அன்பும் கொண்ட அவருக்கு கரோனா வராது, வந்தாலும் அது உடனே போய்விடும்" என்றார்.
மேலும், "இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக யாரோ பெற்ற பிள்ளைக்கு யார் பேர் வைப்பது என்பதுபோல் உள்ளது. நல்ல மனம் ஸ்டாலினுக்கு இல்லை. அதனால்தான் அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை" என்றார்.
இதையும் படிங்க: மதுரையில் ஒரே நாளில் 2500 கரோனா சோதனை; சு. வெங்கடேசன் பாராட்டு