மதுரை: அதிமுகவின் பொன்விழா மற்றும் 51ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை TM கோர்ட் பகுதியில், மதுரை மாநகர் மாவட்டக்கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், 'எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுக உருவான வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. 50ஆண்டுகளில் 31ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சியாக அதிமுக திகழ்கிறது. மக்களுக்கான இயக்கம், அதிமுக. திமுகவிற்குச் செல்வங்களை அள்ளிக்கொடுத்தும், மறையும் தருவாயில் தொழிலாளிகளுக்குத் தனது சொத்தையும் கொடுத்தவர் எம்ஜிஆர், அவர் அவதார புருஷர்.
எம்ஜிஆர்-க்குப் பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று கருணாநிதி உள்பட அனைவரும் நினைத்தார்கள். பலமுறை பிரிந்து பலமுறை இணைந்தும் இருக்கிறது, அதிமுக. இன்றைக்கும் அத்தகைய சோதனை தான் நடக்கிறது. எப்போது ஸ்டாலின் போய் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “சாதி குறித்து ஆர்.எஸ்.பாரதி அவதூறாகப்பேசியுள்ளார். ஓசி ஓசி என்று பேசும் திமுக அமைச்சர் பயன்படுத்தும் அனைத்தும் ஓசி தான். அவர்தம் மனைவிமார்களைத் தவிர, மற்றவை ஓசி தான். நிதி அமைச்சர் டான் என்றால், நாங்கள் சூப்பர் டான். தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டுக்காரணம் சொல்கிறார். அதற்கு நிதியமைச்சர் தேவை இல்லையே அலுவலர்களே போதும்.
முதல் கையழுத்தே நீட் ரத்து என்று சொன்னார்கள். இதுவரையில் ரத்து செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலின் என்றைக்கு செங்கலை தூக்கினாரோ அன்றிலிருந்து செங்கல், கம்பி உள்ளிட்ட அனைத்து விலையும் உயர்ந்து விட்டன. எம்ஜிஆர் உடன் தன்னை ஒப்பிடுவதை முதலமைச்சரே ஒத்துக்கொள்ளமாட்டார். நிதி அமைச்சர் நீண்ட காலம் பதவியில் இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு டானால் (நிதிஅமைச்சர்) தான் ஆபத்து. டாஸ்மாக் விற்பனையில் இலக்கு வைக்க முயற்சி செய்யும் அவல நிலையில் தான் திமுக ஆட்சி நடக்கிறது” என்றார்.
மேலும் பேசிய அவர், “திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் ஒன்று கூடிவிட்டனர். கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வெடிப்பைப்போல் தற்போது கார் வெடித்து உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ஒழுங்கின் லட்சணம். புதிய வாகனச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. லஞ்சத்திற்கு வழிவகுக்கும். இதுதான் துக்ளக் ஆட்சி. அபராதம் விதிப்பதை விட விதி மீறல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியாக அணுக வேண்டும்.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வர உள்ள வாரிசு படத்தில் உண்மையில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும். திரைக்கதை ஸ்டாலினாக தான் இருக்க வேண்டும். மேயரை எதிர்த்து அமைச்சரே உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறுவது உலகத்திலேயே எங்கும் நடைபெறாதது. நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான், திமுக ஆட்சி. தற்போது மக்கள் அதிமுக ஆட்சியை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்: கிடைத்தது மத்திய அரசின் அனுமதி; வழக்குப்பதிந்த என்.ஐ.ஏ