மதுரை: அதிமுக மாநாட்டை பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பயப்படுகிறார் எனவும் நீட் (NEET) வருவதற்கு திமுக தான் முக்கிய காரணம் எனவும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பில் “அதிமுக எழுச்சி மாநாடு” நடைபெற உள்ளது. இதற்காக யானைக்கல் பகுதியில் அதிமுக மாநாட்டிற்கான விளம்பரம் தாங்கிய ராட்சத பலூனை செல்லூர் ராஜூ இன்று (ஆக.17) பறக்க விட்டார்.
அதிமுகவின் மாநாட்டை தடுக்கவே திமுக உண்ணாவிரதம்: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,“அதிமுக மாநாட்டிற்கு எதிர்ப்பு கிடையாது எதிர்க்கட்சி நடத்தும் மாநாட்டை முதலமைச்சர் தடுக்க வேண்டும் என்பதற்காக தன் மகனைக் கொண்டு உண்ணாவிரதத்தை அறிவித்து இருக்கிறார். ஆளும் கட்சியான திமுக எதிர்க்கட்சி அதிமுகவைப் பார்த்து பயப்படுகிறது என்றார். அதிமுக மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் எழுச்சி ஏற்படுகிறது இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தன்னுடைய மகனை வைத்து உண்ணாவிரதத்தை அறிவித்திருக்கிறார்.
வீரனுக்கு அழகு: மேலும், நீட் தேர்வை (NEET Exam) ரத்து செய்வோம் அதற்கு கையெழுத்து போடுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஒரு பொம்மை முதலமைச்சராக தமிழ்நாட்டின் முதலமைச்சர் இருக்கிறார். உண்ணாவிரதத்தை சென்னையில் நடத்துகிறார்கள். ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் அல்லது பிரதமர் வீட்டு முன்பு தான் நடத்த வேண்டும் அதுதான் ஒரு வீரனுக்கு அழகு என்று கடுமையாக சாடினார்.
கல்வியை தேசிய பட்டியலுக்கு தாரைவார்த்தது திமுக: மேலும், நீட் தேர்வைக் கொண்டு வந்ததற்கு காரணமாக இருந்தது திமுக அரசு தான். மேலும், கல்வி மாநில பட்டியலில் இருந்ததை மத்திய கல்வி பட்டியலில் இணைத்தது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான்; இதை ஜெயலலிதா அன்றைக்கு எதிர்த்தாக செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய இணை அமைச்சர் காந்தி செல்வன். அதேபோல் மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தார். அன்றைக்கு நீட் தேர்வை தடுக்காமல் இருந்துவிட்டு தற்போது இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்; மக்களை குழப்பவே?: தற்போது தமிழ்நாட்டிற்கு வந்து நீட் விதிவிலக்கு வேண்டும் என்று மக்களையும், மாணவர்களையும் குழப்புகிறார்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். மாணவர்களை குழப்பி பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் திமுக செயல்படுகிறது. திமுக நடத்த உள்ள நீட் தேர்வுக்கான போராட்டம் தேவையற்றது. இவர்களுடைய எண்ணம் அது கிடையாது மக்களை குழப்பி நாடாளுமன்றத்தில் சீட் பெற வேண்டும் என்பதே இவர்களது எண்ணம் எனவும், மக்களை இனிமேல் ஏமாற்ற முடியாது மக்கள் விழித்துக் கொண்டார்கள் என்றார்.
நீட் தேர்வைக் கொண்டு நாடகமிடும் திமுக-காங்கிரஸ்: மேலும், உச்ச நீதிமன்றத்தில் நீட் வேண்டும் என்ற வழக்கை வாதாடியது ப.சிதம்பரத்தின் மனைவி நளினி தான் எனவும், தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாகவும், நீட் வருவதற்கு திமுக தான் காரணம் எனவும், உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று கேட்டது நளினி சிதம்பரம் தான் எனவும், திமுகவும் காங்கிரஸும் நாடகமாடுகிறார்கள். தமிழ்நாடு மாணவர்களை ஏமாற்றும் செயலை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:Madurai AIIMS: "2028ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸை கட்டி முடிக்க நடவடிக்கை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்