மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவர் செல்லம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை தற்காலிகமாக மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “செல்லம்பட்டியில் அறுவடை காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, பின்னர் மூடப்படும். தற்போது நெல் அறுவடைக் காலம் இல்லாத சூழலில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மதுரை மண்டல மேலாளர் தரகர்கள், பெரும் பணக்கார மில் முதலாளிகளுக்கு உதவும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
இந்தச் செயல் சட்டவிரோதமானது, இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே செல்லம்பட்டியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், இருதரப்பினர் இடையே உள்ள முன்விரோதம் காரணமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.