திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் கட்சியின் சார்பில் போட்டியிடும் ரேவதியை ஆதரித்து மதுரை மாவட்டம் நாகமலை மந்தைத் திடலில் பரப்புரை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
ஆறு, குளங்களை சீரமைத்து, அவற்றில் மழை நீரைச் சேமிக்கும் எந்த திட்டமாவது திமுக, அதிமுக கட்சிகளிடம் உண்டா? இலவசங்களைத் தந்து மக்களை உழைப்பிலிருந்து அப்புறப்படுத்துவதே இவர்களின் நோக்கம்.
நல்ல காற்று, நிழல், பசியாற பழம், பறவைகளுக்கு இருப்பிடம் தருகிறது என்றுதான் மரங்களை நாம் பார்த்துப் பழகி வருகிறோம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு காசு, துட்டு, வெட்டு... வெட்டு... என்றே பார்க்கிறார்கள். மரங்களைக் கூட நட்டு வளர்த்துவிட முடியும். மலைகளையும், ஆற்று மணல்களையும் எவ்வாறு உருவாக்க முடியும்?
கல்வி, மருத்துவம், குடிநீர் இவற்றை இலவசமாகத் தர முடியாத அரசு நல்ல அரசல்ல. ஆனால் நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால், இதனைச் செய்யும். இருக்கின்ற அமைப்பில் ஆட்களை மாற்றுவதல்ல, அடிப்படை அமைப்பு மாற்றமே எங்களின் நோக்கம்.
தமிழ்நாடு மக்கள் ஜெயிக்கிற கட்சிக்கு வாக்கு என்ற மனநிலையிலிருந்து மாற வேண்டும். தாங்கள் வாக்களிக்கின்ற கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
திமுக, அதிமுக கட்சியில் நிற்கின்ற வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியில் நிற்கின்ற அனைவருமே அடித்தட்டு உழைக்கு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.