கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எடுத்துவருகின்றன. அதனடிப்படையில் இன்று நாட்டுப்புறக் கலைஞர்கள் எமன், சித்திரகுப்தன் வேடமணிந்து மக்களிடையே கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பரப்புரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் பா. சரவணன், திருப்பரங்குன்ற காவல்நிலைய ஆய்வாளர் மதனகலா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சரவணன், "சுகாதாரத்துறையில் மேன்மையடைந்த நாடுகளில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இரண்டு விழுக்காட்டிற்கு கீழ்தான் உள்ளது.
மதுரையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவிற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகிவிட்டது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இன்றளவும் முகக் கவசம் பற்றாக்குறை நிலவி வருவதால் அபராதம் வசூலிப்பவரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அந்தப் பணத்தில் முகக் கவசம் வழங்கும் நடவடிக்கையை எடுக்கவேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பது தேவையற்றது. தற்போது கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதால், முழு ஊரடங்கு என்பது அவசியமில்லாத ஒன்று. அரசு நிறுத்திவைத்துள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 100 கிலோ நடைபயணம்... லிஃப்ட்: மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிய மனிதநேயர்கள்!