மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயாருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை தமிழ்நாடு சுகாதாரத் துறை உறுதி செய்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்த மூதாட்டியின் உடல் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
இவரது மகன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றுகிறார். மூதாட்டி பலியானதை அடுத்து, மதுரையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு பேர் இதுவரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அம்மூதாட்டியின் குடும்பத்தார், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதேபோல், தற்போது 52 பேர் கரோனா வைரஸ் காரணமாக மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.