மதுரையில் மலர் வணிகம் மாட்டுத்தாவணி பூ சந்தை, வில்லாபுரம் பூ சந்தை, வலையங்குளம் பூ சந்தை என மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. அதில் மாட்டுத்தாவணி பூ சந்தையில் கடைகள் கிரைய அடிப்படையில் பத்திரப் பதிவு செய்து தவணை முறையில் வசூல் செய்யப்பட்டு, தற்போது இவர்கள் முழு கடனையும் கட்டி சொத்து வரி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மலர் மொத்த வணிகர்கள் சங்க செயலாளர் முத்து செய்தியாளரிடம் கூறுகையில், “சந்தையில் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் இங்குள்ள உள்ள பொது இடங்களை பராமரிக்க சந்தை குழுவின் செயலாளராக அரசு தரப்பிலிருந்து டெய்சி ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனக்கு கீழ் பணிபுரியும் நபர்களை வைத்து மலர் வணிகர்களை மிரட்டி பணம் வசூல் செய்தும் உயரதிகாரிகள் பெயர்களைச் சொல்லி கடைக்கு சீல் வைத்துவிடுவேன் எனவும் மிரட்டுகிறார். சில கடைகளுக்கு சீல் வைத்துள்ளார். பணியாளர்களை வைத்து அடித்துவிடுவேன் எனவும் மலர் வணிகம் செய்யும் வியாபாரிகளை மரியாதை இல்லாமல் ஒருமையிலும் பேசுகிறார்.
தற்போது கரோனா தொற்று காரணமாக கோயில்கள், வழிபாட்டு தலங்கள் பூட்டப்பட்டுள்ளன. மேலும் விமான போக்குவரத்தும் சரிவர இல்லாத நிலையில் மலர் ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளூர் வணிகர்களை நம்பியே விவசாயிகள் பூக்களை இங்கு கொண்டு வருகின்றனர்.
கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து உடல் பரிசோதனை மேற்கொண்டு தகுந்த இடைவெளியை பின்பற்றி தொழில் செய்துவருகிறோம். ஆனால் சந்தை குழுவின் செயலர் டெய்சி ராணி, அவர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் பணம் கேட்டு அடாவடி செய்வதுடன் பணம் தராத கடைக்காரர்களை எந்தவிதமான விளக்கமும் கேட்காமல் கடைகளைப் பூட்டி சீல் வைத்து செல்கின்றார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளோம். கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கும் அதிகாரம் எந்தச் சட்டத்திலும் இல்லாத நிலையில் இது போன்ற நடவடிக்கையால் நாங்கள் நீதிமன்றத்தை நாடி இதற்கான பரிகாரங்களை தேடிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதுகுறித்து டெய்சி ராணியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, `வணிகர்கள் கூறும் அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். முறையாக மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின் பேரிலேயே நான் செயல்படுகிறேன்` என்றார்.