மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளப் பகுதியில் இன்று (ஜன.05) அதிகாலை ஒருவர் உயிரிழந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த சரவணன் (56) என்பதும், இவர் திருமங்கலம் விமான நிலைய சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பல நாட்களாக ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், சூதாட்டத்தின் மூலம் 8 லட்சம் ரூபாய் வரை இழந்ததால் மனவிரக்தியில் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் சரவணன், வீட்டில் இருந்த மனைவியிடம் வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டு, நேற்று (ஜன.04) இரவு வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீட்டை விட்டு வெளியே வந்த சரவணன் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சரவணன் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், “ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததா, இல்லையா என்பதே தெரியவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை மருத்துவக்கல்லூரியை தேர்தல் பணிக்கு பயன்படுத்த தடை கோரி வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!