சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ அலுவலர்களின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கூறிய 10 பேரில், முதன்மை குற்றவாளிகளாக கருதப்படும் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட ஐந்து பேரையும் காவலில் எடுக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) மனு தாக்கல் செய்தது.
சிபிஐ காவல் கோரிய மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (ஜூலை14) விசாரணை நடைபெற்றது. இதில், சிபிஐ ஐந்து நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், மூன்று நாள்கள் காவலில் எடுக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு ஐந்து பேரும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடமும் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவர்