மதுரைக்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸின் பொறுப்பாளருமான சஞ்சய் தத் தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மனித உரிமைகளை பறிக்கும் செயலாகவும், ஜனநாயகத்தை முடக்கும் செயலாகவும் உள்ளது. மசோதாவிற்கு எதிரான போராட்டம் மற்றொரு சுதந்திரம் போராட்டம் போல உருவெடுத்துள்ளது.
மோடி, அமித்ஷாவின் உத்தரவுபடி காவல்துறை செயல்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடைபெறும் நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் கலவரம் ஏற்படுகிறது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின்போது பாஜகவின் மாணவர் சங்கம் காவல்துறை போல புகுந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் பாராட்டுதலுக்குரியது. அமைதியான போராட்டத்தை கலவரமாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்.
குடியுரிமை மசோதா இந்திய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி நாளுக்குநாள் குறைந்துவருகிறது, அதே சமயம் பெண்களுக்கு எதிராக தாக்குதல்கள் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகிறது. பெண்கள் தொடர்பான ஏராளமான வழக்குகள் பாஜக தலைவர்கள் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகளில் பாஜக அரசின் துறைரீதியான தோல்விகளை திசை திருப்புவதற்காக இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றி நாட்டை பதற்றமாக வைத்துவருகின்றனர்.
சீனா-இந்திய எல்லையில் இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்திவருவதை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இன்டர்நெட் முடக்கம் , மெட்ரோ ரயில்சேவை நிறுத்தம் போன்றவற்றில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? ஜம்மு காஷ்மீரை போல்தான் நாடு முழுவதும் பதற்றமாகவே உள்ளது. தொடர்ந்து, இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்த அதிமுகதான் இந்த மசோதாவை எதிர்த்திருக்க வேண்டும்.
ஆனால் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மசோதாவை ஆதரித்து, இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது. பாஜக ஆட்டுவிக்கும் ஆட்டத்திற்கு ஏற்ப ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆடிவருகின்றனர். இருந்தபோதிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்பதிலும், மத்திய அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து துணிச்சலாக இருந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஒடிசா போன்ற மற்ற மாநிலங்கள் மசோதாவை எதிர்த்தபோது அதிகார பலத்துடன் உள்ள அதிமுக மசோதாவை ஆதரித்தது வெட்கக் கேடானது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அதிமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. அதிமுக அரசு கமிஷன் அரசு என மக்கள் நினைக்கின்றனர். சாதாரண மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்றால் பணம் கொடுக்காமல் ஏதும் நடப்பதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக அரசு மோடி, அமித்ஷாவின் முகமூடியாக செயல்படுகிறது. அதிமுக மக்களை சந்திக்க பயப்படுகிறது, தமிழ்நாடு மக்களுக்கு அடிப்படை வசதிகளின்றி அவதியுற்று வருகின்றனர். தேர்தல் ஆணையம், வருமானவரித் துறை, சிபிஐ உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கையாளாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க:
’காந்தி குடும்பத்தாருக்கு ஆபந்து வந்தால் மோடியும் அமித் ஷாவும் தான் பொறுப்பு’ - சஞ்சய் தத்