மதுரை மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக இருந்த முழு ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மதுரை சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக வந்த மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி, தனது மூன்றாவது பிரசவத்திற்காக சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தார்.
அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அவருக்கு ரத்த மாதிரி எடுத்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். இவரது கணவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு மருத்துவமனை மூடப்பட்டது. இங்கு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர், செவிலியர் என அனைவருக்கும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் மதுரையில் கரிசல்குளம் பகுதியை காவல் துறையினர் சீல் வைத்து மூடி யாரையும் அனுமதிக்காமல் தடையை அமல்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க...சென்னை மாநகரில் உள்ள பள்ளியில் கரோனா மையம் - ஆட்சியர் உத்தரவு