மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (நவ.02) பல்கலைக்கழக டாக்டர் மு.வ.அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் ஆய்வு செய்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 570 மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ்களைப் பெற்றனர். அவர்களில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 144 மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பருவத் தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்கள்.
இதேபோல், பருவத்தேர்வு முறையில் 22 ஆயிரத்து 782 மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள். 640 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டங்களும், இருவருக்கு அறிவியலுக்கான முதுமுனைவர் பட்டமும், ஒருவருக்கு இலக்கியத்திற்கான முதுமுனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. மொத்தமாக 62 ஆயிரத்து 598 மாணவர்களுக்கும், 71 ஆயிரத்து 328 மாணவிகளுக்கும் பல்வேறு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இது தவிர, 144 மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த விளங்கியமைக்காக நினைவுப் பரிசுகள் மற்றும் பதக்கங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி கெளரவித்தார். இந்த நிகழ்ச்சியில் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் கடுமையான கண்டனங்களை எழுப்பி வந்தனர். மேலும், சங்கர நாராயணனுக்கு டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இன்று ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா முடிவடைந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூகவலைதள பக்கத்தில், ஆளுநர் கையால் பட்டங்களை பெற மறுத்த 15க்கும் மேற்பட்ட சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
அவரின் X தள பக்கத்தில், “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல், ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. சி. ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். மேலும், பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மதுரை காமராசர் பல்கலை. 55வது பட்டமளிப்பு விழா: ஆளுநர் ரவி பங்கேற்பு.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!