தேனி மாவட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில், வைகுண்டம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், “தேனி மாவட்டம் வடுபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர்.
பள்ளிக்காக 12 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பள்ளி கட்டடம் ஆய்வகம் போன்றவை, கட்டப்பட்டு செயல்பட்டுவருகிறது. இந்த 12 ஏக்கரில் 5.86 ஏக்கர் நிலத்தை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆளுநர் பெயரில் பட்டா வழங்கி அரசுக்கு வழங்கியுள்ளோம். இந்த இடத்தில் நாங்கள் விவசாயம் குறித்த பாடங்களை நடத்துவதற்கு முயற்சி செய்துவருகிறோம்.
இந்த நிலையில், இந்த இடத்தில் பத்திற்கும் மேற்பட்டோர் நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். மேலும் 15 பேர் நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர்.
இவர்களை அகற்றுவதற்கு காவல் துறை, வருவாய்த் துறையினரிடம் பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு பள்ளிக்குச் சொந்தமான பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பள்ளி முழுமையாக செயல்பட உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள அனைத்துவிதமான ஆக்கிரமிப்புகளையும் எட்டு வாரங்களில் அகற்றி, இது குறித்து அறிக்கை தாக்கல்செய்ய பெரியகுளம் வட்டாட்சியர், வடுகபட்டி பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.