இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் வேளையில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிர் மருந்துகள் காணவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காவல் துறையிடம் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து மருத்துவமனையின் கீழ் செயல்படக்கூடிய மருந்துகள் சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் ஊழியர்கள், மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்திவருகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையிலும், காலி பெட்டிகளில் உள்ள கைரேகைகள் அடிப்படையில் ஆய்வு செய்தும் மருந்துகளை கொள்ளையடித்து சென்ற நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் கரோனா நோயாளிகளுக்கு மருந்தாக வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டு அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ரெம்டெசிவிர் மருந்து பெறும்போது மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளியின் உடல்நலம், ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்தால் மட்டுமே வழங்கப்படும் என்ற நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் இருந்து கரோனா நோய்த்தடுப்பு மருந்துகள் எப்படி வெளி சந்தையில் விற்பனைக்கு செல்கிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.