மதுரை: வடகிழக்கு பருவமழையால் பல ஏரிகளில் நிறைந்துள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்கு மழை பெய்யவிருக்கும் நிலையில் இதனை அரசு எப்படி கையாள போகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் இன்று (நவ.30) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'திமுக அரசு எல்லா நிலைகளிலும் தோல்வியுற்று மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது.
அரசு நிர்வாகத்தை செய்ய தெரியாமல், தத்துளித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில் தோல்வியடைந்திருக்கிறார். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும்.
இந்நிலையில் தற்போது, ஒருநாள் மழைக்கே சென்னை நகரம் தத்தளித்து கொண்டிருப்பதை தமிழக மக்கள் வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஐந்து நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என்ற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது புதிய 'புயல்' சின்னம் உருவாகி இருக்கிறது.
மாநில நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 224 டிஎம்சி கொள்ளளவு கொண்டுள்ள 90 அணைகளில் நீர்வரத்து அதிகரித்து 110 டி.எம்.சி.யாக உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், நீர்ப்பாசனத்துறை பராமரிப்பில் உள்ள 14,134 பாசன ஏரிகளுள் 1,607 ஏரிகளில் 100 சதவீதம் நீர் நிரம்பிவிட்டன. இதனால் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வயல்வெளிகளையும், குடியிருப்புகளையும் மூழ்கடித்துள்ளது.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி; எழும்பூர் அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகத்தைச் சூழ்ந்த மழை நீர்!
தற்போது 2,097 ஏரிகளில் 76 சதவீதத்திலிருந்து 99 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளன. அதேபோல, 1984 ஏரிகளில் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. இன்னும் ஒரு வாரம் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், ஏரிகள் முழுமையாக நிரம்பும். அந்த ஏரிகளை பலப்படுத்தாமல் இருந்தால், அது உடைந்து ஊருக்குள் தண்ணீர் போகும் வாய்ப்பு உள்ளது.
முதலமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், எந்த அதிகாரி நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை. இதுபோன்ற நேரங்களில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரடியாக சென்று அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் உருவாகியுள்ள புதிய புயலால் சென்னை, வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மற்றும் அதையொட்டி உள்ள மாவட்டங்களில் பெரும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதல் தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யும்.
இதனை இந்த அரசு எப்படி கையாளப்போகிறது? தலைநகரம் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. முதலமைச்சர் எப்போதும் போல, வாய் சொல் வீரராக இதை கடந்து செல்வாரா? அல்லது உண்மையிலேயே மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை களத்தில் இறங்கி எடுப்பாரா?' என திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையை வெளுத்தெடுக்கும் மழை. .வெள்ளக்காடாக மாறிய சாலைகள்!