மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா சாலையில் வசித்தார், மாரிசாமி (72). இவர் மதுரையில் ரயில்வே துறையில் காவலராக பணியாற்றியவர். கடந்த 2004ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், திருநகர் அருகே அமைதி சோலை பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே சளி தொல்லை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
நடைபயிற்சி மேற்கொள்வதற்காக இன்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய அவர், திருநகர் பகுதியிலுள்ள மின்மாற்றியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழப்பதற்கு முன் ஓய்வு பெற்ற அலுவலர் மாரிசாமி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், தனக்கு உடல்நல பிரச்னை மற்றும் உளவியல் ரீதியாக பிரச்னை எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும், இதற்கு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிட்டுளார். தற்போது கரோனா இருப்பதனால் தன்னை பார்க்க யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், போனிலேயே விசாரித்துக்கொள்ளவும் என அக்கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.
இதையும் படிங்க:மனித நேய முயற்சி: கரோனா நோயாளிகளுக்கு ஆட்டோவில் ஆக்ஸிஜன் சேவை